தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஒன்றை அறிமுகப்படுத்துவது உட்பட கட்டார் தனது தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர முன்வந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பாரிய அளவில் மேற்கொண்டு வரும் கட்டாரின் பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் சர்வதேசத்தின் அவதானத்தை பெற்றுள்ளது.
கட்டார் தனது புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான துஷ்பிரயோகத்தை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்த நிலையில் அந்த அமைப்புடனான சந்திப்புக்கு முந்தைய தினத்திலேயே கட்டார் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இது நவீனகால அடிமைத்துவத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக இருக்கும் என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஷரன் பர்ரோ குறிப்பிட்டார்.
கட்டார் கபாலா என அழைக்கப்படும் கடுமையான தொழில் அனுசரணை முறையை கடைப்பிடித்து வருவதோடு இதன்மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் தமது தொழிலை மாற்றுவது அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதற்குக் கூட தமது தொழில் வழங்குனரிடம் அனுமதி பெற வேண்டும். இந்த கபாலா முறையை கைவிடுவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை கட்டார் 2016 டிசம்பரில் வெளியிட்டது.
இந்நிலையில் இன அடிப்படையிலன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படை ஊதியத் தொகையை நிர்ணயிக்க இணங்கி இருக்கும் கட்டார் தொழிலாளர்கள் கட்டாரில் இருந்து வெளியேறுவதை தடுக்கும் தொழில் வழங்குனரின் அதிகாரத்தை பறிக்கவும் உறுதி அளித்துள்ளது. எனினும் இந்த சீர்திருத்தங்கள் அமுலுக்கு வரும் திகதி பற்றி எந்த தெளிவான அறிவிப்பும் வெளியாகவில்லை.
கட்டாரில் 1.5 தொடக்கம் 2 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதோடு இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளில் இருந்து வந்த கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்களாவர்.
2022 உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான கட்டுமான பணிகளில் ஈடுபடும் குறைந்தது 1,200 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக 2013 ஆம் ஆண்டின் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அது தொடக்கம் மேலும் அதிகரித்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.